Thursday, June 23, 2011

No Problem Sir

வழக்கம் போல இன்னிக்கும் ஒரு வார இறுதி வெள்ளிகிழமை..


கடைசி நாள், எல்லா அப்ரைசைல் மீட்டிங் முடிக்க வேண்டும்..


இருப்பதோ 8 மணி நேரம்.. கடைசி 4 பேர்..ஒருத்தருக்கு ஒரு மணி நேரம்.. 4 மணி நேரம் ஓடி விடும்..அப்புறம் வெட்டி மெயில் ரிப்ளை பண்ண வேண்டும்..சாப்பாடு சிகரேட் காபி டீ அடிக்கடி குறிக்கிடும் தொந்தரவு எல்லாத்தையும் சிரித்து கொண்டே பதில் சொல்ல வேண்டும்.. MNCயில் வேலை  என்றால் சும்மாவா..


மாதம் சுளையாக 2 லட்சம் சம்பளம்..யார்கிட்டயும் சொல்லாதீங்க...tax அப்புறம் மிச்ச சொச்சத்தையேல்லாம் பிடிச்ச பின்னாடிதான்..


இந்த சம்பளைத்தை வைச்சுதான் என் குடும்ப சாப்பாடு, ஹோம் லோன் , கார் லோன், பெர்சனல் லோன், குழந்தை ஸ்கூல் பீஸ் மாசம் இரண்டு தடவை பிவிர் ஆர் சினிமா வீட்டுக்கு சோபா ஏசி எல்லாத்தையும் மேனேஜ் செய்யனும். ஊருக்கு போனா பணத்தை விட்டு எறியனும்...என்ன மாச கடைச்யில் ஒரு ஆயிரம் ரூபா கணக்கில் இருக்கும். ஆனா நானும் ஐடி பொறியாளர் இல்ல இல்ல மேனேஜர்....


இந்த அப்ரைசல் ரேட்டிங்கில் என் பங்கு ஏதும் இல்லை..எல்லாம் எனக்கு மேல இருக்கறவங்க போடறது..என் வேலை தம்பி இது தான் உன் வேலைக்கு கிடைச்ச மதிப்புன்னு சொல்றதுதான். வெள்ளிகிழமை பொதுவா நல்ல நாள்..வேலையை விட்டு அனுப்புறதோ ..அப்புறம் என்ன கேடு கெட்ட காரியங்கள் பண்றதா இருந்தால் வெள்ளிகிழமை தான் தோதுவான நாள்..


.அப்ரைசலில் வேலைக்கு ஆகாத ஆட்களுக்கு உன் ரேட்டிங்க் இது தான்ன்னு சொல்லி நேரத்தை ஓட்டி அனுப்பனும்.. என்ன கேவலமான ரேட்டிங் கிடைச்சா அவனுங்களே ஒடிடுவாங்க..இல்லேன்னா ஒரு மாசம் தாக்கு புடிப்பாங்க வேற வேலை கிடைக்கிற வரை.. என் வேலை அவனுங்கிட்ட பக்குவமா அமைதியா சொல்றது தான்..


இன்னிக்கு யாரோ ...
வழக்கம் போல மெயிலில் வந்த லிஸ்டை படித்தேன்..


-*-




நாலு பேரில் ஒருத்தன் ..சிவா..இவன் எப்படி இந்த லிஸ்டில். நல்ல பையன்..நல்லா வேலை பார்பான்..இவன் கிட்ட கொடுத்த வேலை எதுவும் திரும்ப வந்ததே இல்லை..இரண்டு மாசம் முன்னாடி இவன் பண்ணின ப்ரோகிராமால் பெரிய வேலை கூட ஒன்னுமில்லை ரொம்ப சிம்பிள்ன்னு சொன்னாங்க.. வேலைக்காத ப்ராஜட் கூட இவன் இருந்தா சக்ஸஸ் ஆகும்..


இவன் பேரு எப்படி இந்த லிஸ்டில்..??


எனக்கே நம்ப முடியவில்லை..வாங்கிற சம்பளத்து பேஸ்புக் ஆர்குட்ன்னு நோண்டாம வேலை செய்கிறவன்..இவன் எப்படி..விசாரிக்கனும்..


ஹ்லோ இது சுனிலா?? என்ன சார் சிவாவை ப்ளாக் லிஸ்டில் போட்டு வைச்சு இருக்கீங்க !!??


ஏதும் கேக்காதீங்க..எல்லாம் அந்த மீனா பண்றது..இவன் அவ போட்ட டிசைனில் ஏகப்பட்ட குறை கண்டு புடிச்சு மெயில் அனுப்பினானாம் !! அதுக்கு ஒன்னும் தெரியாது..உண்மையாதான் சொல்லி இருப்பான்..ஆனா மீனா 10 வருசமா இந்த கம்பனியில் இருக்கு அது தான் சீனியர் ஆர்க்கிடெக்ட்..இவனுக்கு எதுக்கு இந்த வேலை??அதை எதுத்து என்ன கேள்வி கேட்டாலும் இதுதான் நிலைமைன்னு தெரியாதா??அது எல்லா சீனியர் மேனேஜர்கிட்டயும் இவன் வேஸ்ட்ன்னு feedback கொடுத்து இருக்கு..என்னாலும் ஒன்னும் பண்ண முடியாது,,எப்படியாவது அவனை சரிகட்டி அனுப்பு...


-*-




ம் என்னாலும் ஏதும் செய்ய முடியாது,,ஐடி வேலை அடிமை வேலை..இங்கு வாய் இருப்பவன் தான் பிழைக்க முடியும்...வாய் இல்லாதவன் எல்லாம் அடிமையாக சாக வேண்டியது தான்..எனக்கு வாய் ரொம்ப இருக்கு தெரிந்து தான் இந்த வேலையில் என்ன போட்டாங்க..ஆனா எப்படி இந்த சிவாவை ஹேண்டி செய்யறது..க்ளீன் ரிப்போர்ட்..ஏகப்பட்ட client regimentation வேற ..எப்படியோ செய்யனும்..மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் பாரதிராஜ படத்தி வரும் தேவைதைகள் ஆயிரம் நோட்டாய் என் மேல் பறந்தது.. பிவிஆர் கோல் க்ளாசில் சினிமா பார்க்கும் போது என் தேவதை கொடுக்கும் smileக்கு முன்னாடி ஏதும் பெரிது இல்லை..


ஹாய் சிவா
ஹலோ சார்.


வழக்கமான பேச்சுக்கு பின்னர்..


சிவா உனக்கு இந்த வருசம் ரேட்டிங் D தான் கொடுத்து இருக்கோம்..உனக்கு கிடைச்ச feedback..நீ ரொம்ப கேவலமாக கோட் பண்றே.. எந்த வேலையும் சரியாக செய்யலே..


சார் உங்களுக்கே தெரியும்


என்ன தெரியும்


எல்லாம் மீனா மேடம்..


சிவா be professional..


ஒக்கே சார்


கொடுத்த ரேட்டிங்க வாங்கிக்கோ இல்லை HRகிட்ட பேசலாமா??


no problem sir..


என்னிடம் கை கொடுத்து விட்டு ரேட்டிங்க் வாங்கிட்டு உடனே போய்ட்டான்..அடுத்த ரெண்டு நாளில் வேலையை விட்டு போய் விட்டான் என்று யாரோ சொன்னார்கள்..வேற வேலை அவனுக்கு கிடைச்சிதா ?? அவனுக்கு family இருக்கா என்ன செய்கிறான்னு யாருக்கும் தெரியவில்லை ..காலை 9 மணி முதல் ராத்திரி 10 மணி வரை ஆபிஸே கதியேன்னு இருப்பான்....பாவம் அவனை இப்படி .....


-*-


வழக்கம் போல இன்னிக்கு மேனேஜர் மீட்டிங்க்...
ஹ்லோ எல்லா ப்ரோஜட்ட்டும் red status..எல்லாரும் என்ன பண்றீங்க..இந்தியா செண்டரை மூடிலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க.. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் ப்ராஜட்டும் greenக்கு வரனும் இல்லேன்னா எல்லாம் அவ்வளவுதான்..தெளிவான ஆங்கிலத்தில் அந்த வெள்ளைகாரன் சொல்லிவிட்டு போயிட்டான்.. எப்படி வரும்..மேற்கே சூரியன் உதிச்சாதான் வரும்.,,,,நானும் இங்க இருந்து கிள்ம்ப வேண்டியது தான்..கிள்ம்பியே ஆகனும்...போடு resumeயை naukriயில்..


சார் , இந்த வாரம் 10 மணிக்கு உங்க இண்டர்வியூ மறக்காம போங்க பெரிய MNC உங்க கம்பேனியை விட பத்து மடங்கு பெரிசு , take home 3 L தருவாங்க.. மறக்காம போங்க.. தனக்கு கிடைக்க வேண்டிய ஒரு மாத சம்பளத்துக்காக பத்து தடவை போன் செய்த கன்சல்டன்சி ஆள்..


போயே ஆகனும்..இனிமே இந்த வேலை சரி வராது..


சரி எங்க இண்டர்வீயூ..தாஜ் கோரமண்டலில் சார்...5th floor..


ம் இண்டர்வீயூ கூட பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடத்தும் கம்பனி..வேலை கிடைச்சா அப்படியே என் தேவதைக்கு வீட்டிலே 10 ஸீபிக்கர் வைச்சு பிவிஆர் தியேட்டர் போல படம் காட்டுவேன்..பெரிய கார் வாங்கி பெட்ரோல் போட்டு எல்லாருக்கு சீன் போடலாம்...




சரியான நேரத்துக்கு வந்தாச்சு !!
சார் நீங்க *** தானே உக்காருங்க உங்களை எம் டி இப்பவே கூப்பிடுவாங்க..


மேஜையில் கிடந்த டைம்ஸ் ஆப் இந்தியாவில் வழக்கம் போல பாக்கிஸ்தான் அனுகுண்டு அப்படியே தனுஷ்கோடியை தான் அடிக்க போவுதுன்னு கதை இருந்தது...


சார் உள்ள போலாம்..


போகும் போது ஏதோ தெரிந்த முகம்..


இது மீனா தானே...இவ எங்க..என்ன பாக்கலியே.. இவளும் வேலை தேடறாளா..பெரிய கையாச்சே இவளுக்கு பிரச்சனையா ??இவளுக்கு பிரச்சனைன்னா நான் எல்லாம் எங்கே..


சார் உள்ளெ வரலாமா !!


வாங்க மிஸ்டர் ****..


நாற்காலியில் அதே சிவா கோட் சூட் போட்டு கம்பீரமாக ....


பேக் கிரவுண்டில் யுவன் சங்கர் ராஜா வழக்கம் போல மூக்கால் சத்தமாக ஏதோ பாடி கொண்டு இருந்தார்..







Thursday, September 24, 2009

சென்னையில் வீதி உலா

சென்ற வாரம் தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை.

கூர்க் மைசூர் தசரா என ஏகப்பட்ட திட்டம் போட்டும் மிக பெரிய தோல்வி..:(

சென்னை பக்கம் விடுமுறைக்கு ஒதுங்கலாம், நண்பர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சிறு திட்டம்.

பெங்களூரில் இருந்து உலகத்தின் எந்த இடத்துக்கும் weekendல் டிக்கேட் கிடைத்து விடும், ஆனால் சென்னை செல்வது மட்டும் சான்ஸே இல்லை. பகல் இரவு பஸ்ஸோ டிரையினோ எங்கும் மக்கள் வெள்ளம் தான். எப்படியோ பகல் நேர பேருந்தில் இடம் பிடித்து சென்னைக்கு தொடங்கியது.

எனக்கு பகல் நேர பயணம் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்க்கவே வேண்டாம்.

சாலைகளின் ஆங்காங்கே தென்படும் சாதாரண மனிதர்களும் பெயரை படிப்பதற்க்குள் மறைந்து போகும் பெயர் பலகைகளும் எப்போதும் சுவாரசியமானவை.

எங்கோ திடீரென்று சாலையில் ஒதுங்கி இருக்கும் மோட்டல்களும் அதன் மனிதர்களையும் பகல் நேரத்தில் பார்க்க வெகு ஆச்சர்யமாக இருக்கும்..

Bangalore electronic cityயை தாண்டியவுடன் சாலைகளில் தென்படும் தமிழ் எழுத்துகள் மனதுக்குள் சிறிய புன் சிரிப்பை விட்டு செல்லும்.

- * -

நான் சென்னையில் வசித்தது நிரந்தரமாக வசிக்க நினைத்து இருந்தது சில மாதங்கள் மட்டுமே..

அடிக்கடி சொந்த வேலையாக வரும் போது ஒவ்வோரு முறையும் சென்னை நகரம் ஏதேனும் பாடங்களை கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது.

என்னுடன் பெங்களூரில் வசித்த முக்கால்வாசி நண்பர்கள் என்றோ சென்னையை நோக்கி சென்று விட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் பிடித்த பல விசயங்கள் எனக்கோ பிரச்சனைகளாக தெரிகிறது..


சென்னை நகரம் மாறி கொண்டே வருகிறது, எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறது... காஞ்சிபுரம் பைபாஸ் தாண்டியவுடன் புத்தம் புதுசாக ஏகப்பட்ட மருத்துவ கல்லூரிகள் முளைத்து இருக்கிறது. . பெயர் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில் காஞ்சிபுரம் வரை சென்னையின் எல்லை என யாரேனும் சொன்னாலும் சொல்வார்கள்.

என் நண்பன் மிகவும் மும்முரமாக மேல் மருவத்தூரில் வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறான். அங்கேயும் 20 லட்சத்திற்க்கு குறைந்து இடம் இல்லையாம்..

திருமுல்லைவாயில் ஆவடி பக்கம் எல்லாம் சில ஆண்டுகள் முன்னர் வரை பாசனம் செய்து வந்த இடங்கள். இன்றையை நிலை சொல்லவே வேண்டாம்..

சென்னை நடுத்தரவாசிகள் நகரம் என யார் சொன்னது?

- * -

பெங்களூரில் தினமும் 3 கிலோ மீட்டர் ஜாகிங் செல்லும் போது எட்டி பார்க்கும் வியர்வை துளிகள் சென்னையில் இரவு எட்டு மணிக்கு எந்த வித உடல்உழைப்பும் இல்லாமல் எட்டி பார்க்கிறது. இரவில் அட்டகாசமாக வெப்ப காற்று வேறு. பகலில் சொல்லவே தேவை இல்லை..சாலையில் ஏஸி போடாமல் எந்த காரும் செல்வதில்லை. பரவலாக அனைத்து நடுத்தர வர்க வீடுகளிலும் ஏஸி இருக்கிறது. சாதாரண ஷாப்பிங் கடைகளிலும் ஏஸி.. என் நண்பனின் கடையில் தினமும் குறைந்தது 50 ஏஸி சாதனங்கள் விற்பனையாகின்றன. சென்னை கூடிய விரைவில் துபாயை மிஞ்சி விடும்.

-*-
வழக்கம் போல ஆட்டோகாரர்கள் ஏமாற்றினார்கள், பர்ஸை ஜீன்ஸின் புறபாக்கேட்டில் ஒளித்து வைத்து ரங்கநாதன் தெருவில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முறை சரவணா ஸ்டோர்ஸை விட போத்திஸில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. வழக்கம் போலவே சென்னை தி நகர் கடைவாசிகள் கஸ்டமர் சர்வீஸ் கண்டு மனசுக்குள் திட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இந்த நவராத்திரியிலும் மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் கொலு வைத்து சுண்டல் கொடுக்கிறார்கள்.

சில புதியவைகள் கண்ணில் பட்டன. தி நகர் பக்கம் சுத்தமாக தமிழ் தெரியாமல் பீகார் வாசிகள் சின்ன சின்ன உணவகங்கள் நடத்துகிறார்கள். மக்களும் அரைகுறை இந்தியில் சளைக்காமல் பேசி சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். நிறைய UP MP MH DL வண்டிகள் கண்ணில் பட்டது.

திருவான்மியூர் பக்கம் சாதாரண ஷேர் ஆட்டோகாரர் கூட இந்தியில் பேசி கஸ்டமர் பிடிக்கிறார்.

ஆனால் ஒரிஜனல் சென்னைவாசிகளுக்கோ இதனால் பல பிரச்சனைகள்..இந்திகாரர்கள் பேரம் பேசாமல் வீடு வாடகைக்கு பிடிக்கிறார்கள்.. இதனால் விலை வாசி ஏறி போச்சு என்ற கூப்பாடு வேறு...

சில அபார்மெண்ட்களில் சிண்டிகேட் வைத்து வீடு வாடகையை control செய்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். புரோக்கர் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.. வீட்டு வாட்ச் மேன் கள் முதல் தெரு குட்டி தாதா வரை எல்லாரும் புரோக்கர் ஆகி விட்டார்கள். சென்னையில் இனி தனியாளக வீடு தேடி பிடிப்பது முடியாத காரியம் ..

-*-

சென்னையில் எதற்க்கும் ஒரு விலை இருக்கிறது போலும். ரொம்ப சாதரணமாக ‘ யாராக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற டயலாக் காதில் விழுந்தது. பேச்சு அதுவும் அதிகாரமாக அதட்டி பேச தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் போல. சாதாரண சிம் காட்டு வாங்க கூட சிபாரிசு கூட்டி வருகிறார்கள். சாலையில் சின்ன சின்ன போக்குவரத்து தவறுகளுக்கு கூட குடும்பத்தை இழுக்கிறார்கள்.

சாலையில் சிக்னலில் நிற்க்கும் போது கூட கூச்சமே இல்லாமல் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை போட அனைவரும் தயார் என்ற மன நிலையில் இருப்பதை போல பிரமை..

அடையாரில் ஒரு சிக்னலில் ஹெல்மெட் போடாத யாரோ ஒருவரை போலிஸ்காரர் ஓரம் கட்டிய போது உடனே மொபைலில் யாரையோ துணைக்கு அழைத்து மொபைலை போலிஸ்காரரிடம் கொடுத்து பேச சொன்னார். போலிஸ்காரரும் சளைக்காமல் மொபைலை வாங்கி ஸ்விச் ஆப் செய்து பைக் சாவியை எடுத்து வைத்து கொண்டார்.

ம் இந்த நகரத்தில் அவருக்கும் அவர் வேலையை பார்க்க தனி திறமை தெரிந்து இருக்கிறது.

என்னால் ஐந்து நிமிடத்து மேல் சென்னை நகர சாலைகளில் நண்பனின் காரை ஓட்ட முடியவில்லை. ஆனால் நான் பார்த்த பெரும்பாலன சென்னை கார்கள் எந்த வித வெளி காயமும் இல்லாமல் இருக்கிறது.

பெங்களூரில் சர்வசாதரணமாக 200 ரூபாய் ஆகும் lunch buffet சென்னையில் சரவணபவனில் 120 ரூபாய்க்கு கிடைக்கிறது. சூப்பர் இட்லி கடைகள் மலிவான விலைக்கு ருசியான சாப்பட்டை தருகிறார்கள்....என்னதான் ஏஸி வைத்து இருந்தாலும் மின்சார செலவு மாதம் 200யை தாண்டவில்லையாம்.. தண்ணீர் பிரச்சனையும் முன்பு போல இல்லை...மின்சார ரெயில் நேர சிக்கன பயணம் வால்மீகி நகர் பீச்... என்ன சில நொட்டைகள் இருந்தாலும் சென்னை போல வருமான்னு நண்பன் சொன்ன போது சரிதான் என தலையாட்டினாலும் , சென்னைக்கு நானே வர நினைத்தாலும் அங்கு இனி இருக்க இடம் இருக்காது என்று தான் தோன்றியது.





Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்



இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.


இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??


ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..

அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..


சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,

போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..


4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??

எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??


நம்மவர் கெட்டப்பில் கமல் ...

பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.

இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..

எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

மோகன்லால்..

விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.

மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

இசை

படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..

பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..

விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..

உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.

Saturday, September 5, 2009

Saturday, August 29, 2009

ஊர் வம்பு -1


யார் வம்புக்கும் போகாம இருந்தா வம்பு நம்மை தேடி வராது

இதேல்லாம் சும்மா டூப்பு.


என்ன நேரமோ காலமோ தெரியலை வம்பு தேடி தேடி ஆளை கொல்லுது.

பொதுவாக நான் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தான் பைக்கிற்க்கு பெட்ரோல் ஆகாரம் கொடுப்பது வழக்கம்.


நான் வைத்து இருக்கும் citi bank debit cardகளில் வேறு நிறுவன பங்குகளில் இதே debit card பயன்படுத்தினால் 10 ரூபா கொசுறாக சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் account statementகளில் ஞேஎன்று எட்டி பார்க்கும்..

இந்த கொசுறு எதுக்கு என்று சண்டை போட்டு முடிவு இது வரை இல்லை.

சரி indian oil நிலையதிலேயே பெட்ரோல் போடலாம் என்று அரைமனதாக முடிவு செய்து ஒரே பங்கையே உபயோகித்து வருகிறேன். எல்லாம் நல்லா தான் இருந்தது..

சில நாட்களாக பைக்கில் கணிசமாக மைலேஜ் குறைந்து கொண்டே வந்தது.. ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்த வண்டி 40 35 என குறைந்து கொண்டே வந்தது. ஓட்டும் முறையில் ஏதும் மாற்றம் இல்லை.. hose போட்டு பெட்ரோலை உறியவும் வாய்ப்பு இல்லை.. என்னமோ நடக்குது.. பொருமையாக யோசித்து பார்த்தில் பெட்ரோல் போடும் போதே லம்பாக தில்லு முல்லு செய்தே பெட்ரோல் போடுவது பிடிபட்டது.

பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போதே சார் cardஆ cashஆ , சார் சீக்கிரம் கார்டு கொடுங்க.. பின் நம்பர் கேட்க்குது என எப்படியாவது கவனத்தை திசை திருப்பி தில்லாங்கடி செய்வது தெரிந்தது. ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர்கள் ஆலோசனையோடு பெட்ரோல் நிரப்பும் போது அந்த h1n1 வைரசே வந்தாலும் திரும்ப மாட்டேன் என உறுதி பூண்டு ஜெயித்து விட்டேன்..

ஆனால் இந்த முறை புது மாதிரியான தில்லுமுல்லு.. பெட்ரோல் போடும் போதே மின்சாரம் போய் விடும் ..அல்லது எந்திரத்தில் ஏதாச்சும் கோளாறு ஆகும்.. உடனே ஒரு சூப்பர்மேன் போல ஒருவர் வருவார் ...பட்டனை தட்டுவார்.. மீண்டும் பெட்ரோல் வரும்..

சார் 300 ரூபாக்கு பெட்ரோல் போட சொன்னீஙக கரண்ட் போவதற்க்கு முன்னால் 80 ரூபாவிற்க்கு பெட்ரோல் போட்டாச்சு பாலன்ஸ் 220 ருபாவிற்க்கு போடனும் மீட்டரை பாருங்க.. 80விற்க்கு பெட்ரோல் போடாங்களா இல்லையா மீட்டர் ஓடிச்சா இல்லையா ..??
இந்த முறையும் நல்லா ஏமாந்து சோனகிரியா 300 ரூபா பெட்ரோலில் 80 ரூபா கோவிந்தா கோவிந்தா..

இந்த முறை விட கூடாது..

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரையாவது இவர்கள் ஏமாற்றுவார்கள், ஒருத்தருக்கு 50 ரூபா என்றால் நாள் ஒன்றிக்கு 5000 ருபா வேலை பார்க்கும் 5 பேருக்கும் லாபம் பிரிக்கபடும்..

இணையத்தில் நோண்டிய போது இந்தியன் ஆயில் விஜிலென்ஸ் நம்பர் கிடைத்தது.. இந்தமுறையும் விட கூடாது..

சார் இதே பிரச்சனை தான் சார், அளவு சரியா இருககான்னு நாங்க அடிக்கடி சோதனை நடத்துறோம் அதனலால் லிட்டர் அளவை இப்ப யாரும் மாத்துறது இல்லை.. அதுக்கு பதிலா பெட்ரோல் போடமலே பெட்ரோல் போட்ட மாதிரி ப்ராடு பண்றாங்க ..எந்த ஏரியா பங்க சார்..??

கூடவே விஜிலென்ஸ் அதிகாரி வந்தார்..என் பைக்கில் இருக்கும் மொத்த பெட்ரோல் அளவு குறிக்கபட்டது.. சார் நீங்க வழக்கம் போலவே பெட்ரோல் போடுங்க.. தில்லுமுல்லு ஏதாச்சும் செய்தாலும் கண்டுக்காம பெட்ரோல் போட்டு முடியும் வரை wait பண்ணுங்க..

வந்துட்டான்யா வந்துடான்யான்னு என்னை பார்த்ததும் பெட்ரோல் போடுபவற்க்கு ரொம்ப குழியாக இருந்து இருக்கும் போல. 150 ரூபாவிற்க்கு பெட்ரோல் போடுங்க.

.பெட்ரோல் hose controllerயை அழுத்தியது போல இருந்தது.. 50 ரூபாவை மீட்டர் காட்டியது.. மிசின் struck ஆனது.. பின் reset செய்து 100 ருபாவிற்க்கு பெட்ரோல் போடப்பட்டது.. அதன் பின் அத்தனையும் சங்கர் படத்தில் வருவது போலவே இருந்தது... ..1

50 ரூபாவிற்க்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கனும்.. ஏற்கனவே பைக்கில் இருந்த 2 லிட்டர் சேர்த்து இப்போ 5 லிட்டர் பெட்ரோல் இருக்கனும்.. ஆனால் கணக்கில் வந்ததோ 4 லிட்டர்..

கையும் களவுமாக பிடிபட்டார்கள்,,,,,
விஜிலென்ஸ் அதிகாரி ..ஓனரை கூப்பிடு ..
அவரு இல்லை சார்..
பெட்ரோல் போடுறதை நிறுத்து...
பின்னால் குறைந்தது 20 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்..

டேய் ப்ராடு பண்றதை நிறுத்தவே மாட்டீங்களா.. சத்தம் பெரிதானது.. பின்னால் இருந்த கூட்டமும் சேதி தெரிந்து கூட்டம் பெரிதானது..

கேஸ் போடுங்க சார்.. பங்கை இழுத்து மூடுங்க சார்..எனக்கும் இதே பிரச்சனை தான் சார்..பின்னால் இருந்து பல குரல்கள்..

இப்போ விஜிலென்ஸ் அதிகாரி..முதல்ல இவருக்கு சுட்ட பெட்ரோலை திரும்ப கொடு.
பெட்ரோல் மீண்டும் போடப்பட்டது...

பெட்ரோல் போடும் பையனை பார்த்தேன் 17 வயது இருக்கலாம்..கூடவே அவரின் சக பணியாளர்கள்.. யாருக்கும் வயது இருபதை தாண்டாது..

சார் இதுல ஒரு கை எழுத்து போடுங்க. *** *** பங்கில் இந்த நாள் இத்தனை மணி அளவில் முறைகேடு நடந்ததை கண்டு பிடித்தோம். அதற்க்கு சாட்சியாக அருண் குமார் என்ப்படும் இந்த நபர்.. இந்திய அத்யாவச பொருட்கள் சட்டபடி... பின்னர் நிறைய எழுதி இருந்தது..

நான் அவரிடம்...சரி சார் இனிமே இப்படி நடக்காதா?? பங்க் ஓனர்கள் முதல் அனைவரும் தண்டிக்கபடுவார்களா?

அது பெரிய பார்மாலிட்டி சார்.. நாங்க இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பனும்.. அதுக்கு இவங்க பதில் அனுப்பனும்... அப்புறம் நாங்க ஆதாரத்தை எங்க மேலதிகாரிக்கு அனுப்பனும்.. பார்க்கலாம் சார்..

கண்டிப்பாக பங்க் உரிமம் தடை அல்லது வேலை ஆட்கள் பணி நீக்கம் என ஏதும் நடக்க போவதில்லை என்று தெரிந்தது..

சரி..இப்படி பிரச்சனை செய்து என்ன தான் லாபம்??

தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்.. வரவேண்டும்.. அது வரை திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அவர்களை இப்படி செய்து தான் திருந்த வைக்க முடியும்..

Friday, August 21, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்



















அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரம் போவதே தெரியாமல் ரசிக்க ஒரு மசாலா படம்.

கதை என்ன ?

அது யாருக்கு வேண்டும்...


போஸ்டர் பார்த்தே கதை சொல்ல தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை என்ன தெரியாமலா இருக்கும்..


இந்தியன் அந்நியன் ஜெண்டில்மேன் டைப் கதைகளுக்கு சங்கர் காப்பிரைட் வாங்கி வைத்தால் ரொம்ப புண்ணியமாக போகும்.

என்ன எல்லாருக்கும் தெரிந்த கதையை அட்டகாசமாக திரைகதை ஆர்பட்டமான பாடல்கள் ஆட்டம் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.


முதல் சீனில் ஆரம்பித்து இடை வேளை மூச்சு விட நேரமில்லாமல் ஓடுகிறது
பின்னர் இடை வேளைக்கு அப்புறம் சிறிது தடுமாறி மீண்டும் புயல் வேகம் எடுக்கிறார்கள்..


ஆங்காங்கே வேக தடையாக சில பாடல்கள் அப்புறம் ரொம்ப முக்கியமாக வடிவேல் காமேடி..
வடிவேல் காமேடி படத்தோடு ஓட்டவே இல்லை..

படத்தின் நீளம் 3 : 15 மணி நேரம் , எடிடிங்கில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. தியேட்டர் ஆபரேட்டர்கள் இனி கவனித்து கொள்வார்கள்..


ரொம்ப ரொம்ப விக்ரம் ஸ்மார்டாக விக்ரம் படு கச்சிதமான நடிப்பு கூடவே உடல் மொழி வசன உச்சரிப்பு ..கலக்கீரீங்க விக்ரம்.. அதுவும் பெண் வேடத்தில் வரும் காட்சி ஏ கிளாஸ்


ஸ்ரேயா என்ன சொல்றது ...பாடல்களில் ஜிம்னாசியம் குச்சிபுடி பாக்சிங் என எல்லாம் கலந்து கட்டி ஆடுகிறார்.

’என் பேரு மீனா குமாரி’ பாடலுக்கு தியேட்டர் ஆபரேட்டரை தவிர எல்லாரும் நடனம் ஆடாத குறைதான்..

தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களும் பிண்ணனி இசையும் அபாரம் ..


படத்தின் ஒவ்வோரு ப்ரேமிலும் அபார உழைப்பு தெரிகிறது..
லாஜிக் மீறாத காட்சிகள் அதுவும் மெக்ஸிகோ நாட்டில் வரும் காட்சிகளும் அருமை..


பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா என எல்லாரும் வந்து போகிறார்கள் , வந்துட்டு போகட்டுமே .

.
சுசி கணேசன் இரண்டு வருடம் உழைத்து ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்..

பல மொக்கை படங்களை பார்த்து
நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..

Saturday, August 15, 2009

கண்டதும் கேட்டதும் - 15 08 2009




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்




ஒரு மாசமா ஏகப்பட்ட புது படங்கள் பார்த்து பைத்தியம் பிடிக்காத்து தான் மிச்சம்.


love aaj kal என்ற இந்தி படம்.. இந்த படத்தை எடுத்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைச்சா..




இப்ப வர இந்திபடங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பவே torture பண்றாங்க.. ஏதோ பீகார் ஹரியானா உபி மக்கள் எல்லாம் லண்டன் நீயூயார்க்க்கு மொத்தமா shift ஆகிட்டாங்களா?? எல்லா பட கதையில் நேரடியா லண்டன் பாரீஸ் இப்படிதான் ஆரம்பிக்குது..

இந்த வரிசையில் வந்த New york Love Aaj Kal என்று இரண்டு குப்பை படங்கள் .. இதில் Love Aaj Kal படத்தில் என்ன தான் சொல்லவராங்கன்னு ஒரு மண்ணும் புரியலை.. எப்படிதான் கலாசார காவல்கார சிவசேனா ஆர் எஸ் எஸ் கேங்க் ஆட்கள் இந்த படத்தை விட்டு வைச்சாங்களோ..

தமிழ் படங்கள் சற்றும் சளைத்தவை இல்லை..

சென்ற மாதத்தில் பார்த்த அபத்தங்கள்

சிந்தனை செய், வாமணன், மோதி விளையாடு ..

பல அபத்தங்களுக்கு மத்தியில் சரி புழைச்சு போன்னு வந்த படம் அச்சமுண்டு அச்சமுண்டு.. இந்த படமும் 1.30 மணி நேரம் என்றால் தப்பித்தேன்..

வழக்கமான தமிழ்பட விதியான 2 : 30 மணி நேர படம் என்றால் நினைச்சு பார்க்கவே முடியலை..

வாழ்க்கையில் பொறுமை போதும் அளவு கற்று கொண்டேன்.. விடுஙகடா சாமி ..

************************************************************************

பெங்களூரில் சென்ற வாரம் திறக்கபட்ட திருவள்ளுவர் இன்னமும் incubationல் தான் இருக்கிறார். எப்போதும் காவலுக்கு போலிஸ் மேலும் இலவச இணைப்பாக வீடியோ காமேராக்கள் கண்காணிப்போடு ரொம்ப பத்திரமாக இருக்கிறார்.

இதை பார்த்து எனக்கு திருச்சி திருவரங்கம் பெரியார் சிலை தான் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இன்னமும் திருவரங்கம் பெரியார் அதிரடி படை காவலோடு தான் காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும் பலத்த பாதுகாப்போடு தான் எழுந்து அருளி வருகிறார்கள்..

பேசாமல் காவல்துறையில் சிலை பாத்துகாப்பு துறை என தனியாக ஆரம்பித்து விடலாம்..

சிலைகள் திறப்பதால் என்ன நண்மை என நான் அறியேன் ஆனா வெட்டி வம்பு பார்டிகளுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.. வாழ்க வளர்க

******************************************************************************

எப்போதும் தமிழனுக்கு தான் பேசும் மொழி தொடர்பான அரசியல் ஆர்வம் அதிகம் உண்டு. கன்னடர்களுக்கு திருவள்ளுவர் வாழ்க்கை தமிழ் இலக்கியம் என சுய தம்பட்டம் அடிக்கும் பல ஆட்களை தினமும் காண்கிறேன்..

கூடவே கொசுறாக கல் தோன்றா மண் தோன்றா போன்ற பொன் மொழிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றி தமிழ் பெருமையை நிலை நாட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர்.

என்னவோ தெரியலை தமிழ் செல்வன் தமிழ் செல்வி போல இது வரை நான் கன்னட செல்வனோ தெலுங்கு செல்வியோ பெயர்களை கேள்வி பட்டதே இல்லை.. பேர் வைச்சுகிறது சொந்த விஷயம் ..சரி அதவிடுங்க.. இந்த கல் தோன்றா மண் தோன்றா தான் ரொம்பவே லாஜிக் இடிபடும் செய்தி.. யாராச்சும் இதற்க்கு விளக்கம் சொல்வீற்களா??

**************************************************************************

Friday, July 3, 2009

கொஞ்சம் புலம்பல்...




விகடன்....

இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.

குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..

வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..

அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.

புதுமை என்றால் அது விகடன் தான்

மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..

இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..


விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.


ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.

கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது

பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..

பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??

இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..

வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..

தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...

திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...

அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..

விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.

மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..

இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.

இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??

இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??

இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..


சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...

2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.

அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.


பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..

என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.

இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..


Wednesday, July 1, 2009

கண்டதும் கேட்டதும்


ரொம்பவே பிகு செய்து கொண்டே கடைசியில் மழை துளிகள் பெங்களூர் வாழ் ஊர்வன பறப்பன என பேதம் பார்க்காமல் நனைத்து விட்டு செல்கிறது.



மீண்டும் காவேரி பிரச்சனையை கிளப்பலாமா என்று domain specialists ஹோம் வொர்க் செய்து கொண்டு இருக்கும் போதே மக்களையும் கூடவே பல மனங்களையும் சேறடிக்காமல் வந்து விட்டது பருவ மழை..

காலம் தவறிய பருவ மழையால் நிறைய பாதிப்புகள்.. கர்நாடகா மாநிலத்தில் மின் தடை பிரச்சனை ரொம்ப ரொம்ப அதிகமாகி விட்டது

பெங்களூரில் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..சென்ற வாரம் மைசூர் சென்று இருந்த போது நேரில் அனுபவித்தேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை..

காரணம் மழை இல்லாமல் விவாசாயிகள் பம்ப் செட்டை நாடி செல்வதால் வந்த எதிர் வினை.

கர்நாடகாவில் எந்த அணையிலும் நீர் இல்லை.. நீர் நிலை மின்சார நிலையங்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டன. ...


நல்ல வேளை.. இன்னும் ஒரு வாரம் மழை தவறி இருந்தால்...


*-*

மக்கள் தொகை ,பொருளாதாரம் , வாங்கும் சக்தி வளரும் அளவிற்க்கு நாட்டில் மின்சார உற்பத்தி அதிகரிக்கபடவே இல்லை..

அதிக அளவு மின்சார உற்பத்தியும் ஒரு வகையில் சுற்று சூழல் பாதிப்பு தான் .. பெரிதும் எதிர்பார்க்கபட்ட அனு மின்சார நிலையங்களும் இது வரை பெரிய பூஜ்யம் தான்.

இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிலையங்களிலும் கூடவே மின்சார போக்குவரத்திலும் நடக்கும் முறைகேடுகளை சரி செய்தாலே இன்னும் பல வருடங்களுக்கு புதிதாக எந்த மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்க வேண்டாம்.
-*-

அரசு வேலை ஆசை யாரை விட்டது. தற்காலிக வேலையில் சேரும் போதே பணி நிரந்தரம் ஆக வாய்பில்லை என்று தெரிந்தே சேர்கிறார்கள். ஆனால் வேலை நிறுத்தம் என மிரட்டி நிரந்தரம் ஆக வழி தேடிகிறார்கள்..

வேலை நிரந்தரம் ஆக வேண்டும். பங்குகளை வேறு யாருக்கும் விற்க்க கூடாது, அரசே நட்டட்தையும் தாங்க வேண்டும் ..

தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் பே கமிசன் எல்லாம் வேண்டும். ஆனா மின்சாரம் உற்பத்தி குறைந்தால் மட்டும் பதில் இல்லை..

-*-

பெரிய ஓட்டை விழுந்த பற்றாகுறையை எப்படி சமாளிக்க போகிறரோ நிதி அமைச்சர்.. என்ன கடைசியில் நம் தலையில் தான் சர்வீஸ் டாக்ஸ் வழியாகவே இல்லை வருமான வரியாகவே கடந்து செல்லும்.

கல்விக்காக CESS வரியாக இலவச இணைப்பு ஒட்டி கொண்டே வருகிறது. இது வரை இந்த வரியினால் வந்த வருவாய் பத்து விரல் கொண்டு எண்ண முடியாது. ஆனால் செலவு செய்தது எத்தனை என்றால் யாருக்கும் தெரியவில்லை.

இதை விவாதிக்க வேண்டிய இடங்களில் மக்கள் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. பல தலைவர்கள் லீவு போட்டு ஊர் சுத்த போய் விடுகிறார்கள்.

ஏன் எல்லா எம் பிகளையும் பாராளுமன்றம் தொடங்கும் முன்னர் மொத்தமாக வைத்து இலக்கிய கூட்டம் நடத்த கூடாது?? தமிழ் பிளாக்கில் இருக்கும் சில காமேடி பீஸ்களை அவர்களோடு இலக்கியம் பேச வைத்தால் மிக மிக நன்று..

-*-

முழு மெஜாரிட்டியின் முதல் பயனாக பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வழியாக கிடைத்துள்ளது.


எல்லாம் நல்லதுக்கே என்று வழக்கம் போல கடந்து செல்ல வேண்டியது தான்..

அரிசி பருப்பு மளிகை விலைகள் ஏற்றம் ,மின்சார தொல்லை, மழை இல்லை எல்லாத்துக்கு நடுவே நாமும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறோம்..
-*-

Monday, June 22, 2009

வெட்டி வேலை


காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..



சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்




இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
-*-

விஜய் டிவியில் விருது கொடுக்கும் நிகழ்ச்சி நல்ல விஷயம் தானே , கமல் சாருக்கு ஏகப்பட்ட விருதுகள் சும்மா அள்ளி கொடுத்தாங்க. எனக்கே டவுட்டு பார்பது கலைஞர் டிவியா இல்லை விஜய் டிவியா கனவா நிஜமா..!!??

எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....


-*-
சென்ற வாரம் திருச்சிக்கு ஒரு நாள் அவசர பயணம்.. திரும்பி வர KPN travelsல் திருச்சி -> பெங்களூர் மதிய நேர வோல்வோ பஸ்ஸில் புக செய்து திரும்பினேன்..

எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .

.
பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..

மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..

சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..

வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..

அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது..
நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..

சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..

மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..


விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
-*-


குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger
http://www.liger.org/

நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்