Thursday, September 24, 2009

சென்னையில் வீதி உலா

சென்ற வாரம் தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை.

கூர்க் மைசூர் தசரா என ஏகப்பட்ட திட்டம் போட்டும் மிக பெரிய தோல்வி..:(

சென்னை பக்கம் விடுமுறைக்கு ஒதுங்கலாம், நண்பர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சிறு திட்டம்.

பெங்களூரில் இருந்து உலகத்தின் எந்த இடத்துக்கும் weekendல் டிக்கேட் கிடைத்து விடும், ஆனால் சென்னை செல்வது மட்டும் சான்ஸே இல்லை. பகல் இரவு பஸ்ஸோ டிரையினோ எங்கும் மக்கள் வெள்ளம் தான். எப்படியோ பகல் நேர பேருந்தில் இடம் பிடித்து சென்னைக்கு தொடங்கியது.

எனக்கு பகல் நேர பயணம் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்க்கவே வேண்டாம்.

சாலைகளின் ஆங்காங்கே தென்படும் சாதாரண மனிதர்களும் பெயரை படிப்பதற்க்குள் மறைந்து போகும் பெயர் பலகைகளும் எப்போதும் சுவாரசியமானவை.

எங்கோ திடீரென்று சாலையில் ஒதுங்கி இருக்கும் மோட்டல்களும் அதன் மனிதர்களையும் பகல் நேரத்தில் பார்க்க வெகு ஆச்சர்யமாக இருக்கும்..

Bangalore electronic cityயை தாண்டியவுடன் சாலைகளில் தென்படும் தமிழ் எழுத்துகள் மனதுக்குள் சிறிய புன் சிரிப்பை விட்டு செல்லும்.

- * -

நான் சென்னையில் வசித்தது நிரந்தரமாக வசிக்க நினைத்து இருந்தது சில மாதங்கள் மட்டுமே..

அடிக்கடி சொந்த வேலையாக வரும் போது ஒவ்வோரு முறையும் சென்னை நகரம் ஏதேனும் பாடங்களை கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது.

என்னுடன் பெங்களூரில் வசித்த முக்கால்வாசி நண்பர்கள் என்றோ சென்னையை நோக்கி சென்று விட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் பிடித்த பல விசயங்கள் எனக்கோ பிரச்சனைகளாக தெரிகிறது..


சென்னை நகரம் மாறி கொண்டே வருகிறது, எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறது... காஞ்சிபுரம் பைபாஸ் தாண்டியவுடன் புத்தம் புதுசாக ஏகப்பட்ட மருத்துவ கல்லூரிகள் முளைத்து இருக்கிறது. . பெயர் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில் காஞ்சிபுரம் வரை சென்னையின் எல்லை என யாரேனும் சொன்னாலும் சொல்வார்கள்.

என் நண்பன் மிகவும் மும்முரமாக மேல் மருவத்தூரில் வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறான். அங்கேயும் 20 லட்சத்திற்க்கு குறைந்து இடம் இல்லையாம்..

திருமுல்லைவாயில் ஆவடி பக்கம் எல்லாம் சில ஆண்டுகள் முன்னர் வரை பாசனம் செய்து வந்த இடங்கள். இன்றையை நிலை சொல்லவே வேண்டாம்..

சென்னை நடுத்தரவாசிகள் நகரம் என யார் சொன்னது?

- * -

பெங்களூரில் தினமும் 3 கிலோ மீட்டர் ஜாகிங் செல்லும் போது எட்டி பார்க்கும் வியர்வை துளிகள் சென்னையில் இரவு எட்டு மணிக்கு எந்த வித உடல்உழைப்பும் இல்லாமல் எட்டி பார்க்கிறது. இரவில் அட்டகாசமாக வெப்ப காற்று வேறு. பகலில் சொல்லவே தேவை இல்லை..சாலையில் ஏஸி போடாமல் எந்த காரும் செல்வதில்லை. பரவலாக அனைத்து நடுத்தர வர்க வீடுகளிலும் ஏஸி இருக்கிறது. சாதாரண ஷாப்பிங் கடைகளிலும் ஏஸி.. என் நண்பனின் கடையில் தினமும் குறைந்தது 50 ஏஸி சாதனங்கள் விற்பனையாகின்றன. சென்னை கூடிய விரைவில் துபாயை மிஞ்சி விடும்.

-*-
வழக்கம் போல ஆட்டோகாரர்கள் ஏமாற்றினார்கள், பர்ஸை ஜீன்ஸின் புறபாக்கேட்டில் ஒளித்து வைத்து ரங்கநாதன் தெருவில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முறை சரவணா ஸ்டோர்ஸை விட போத்திஸில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. வழக்கம் போலவே சென்னை தி நகர் கடைவாசிகள் கஸ்டமர் சர்வீஸ் கண்டு மனசுக்குள் திட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இந்த நவராத்திரியிலும் மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் கொலு வைத்து சுண்டல் கொடுக்கிறார்கள்.

சில புதியவைகள் கண்ணில் பட்டன. தி நகர் பக்கம் சுத்தமாக தமிழ் தெரியாமல் பீகார் வாசிகள் சின்ன சின்ன உணவகங்கள் நடத்துகிறார்கள். மக்களும் அரைகுறை இந்தியில் சளைக்காமல் பேசி சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். நிறைய UP MP MH DL வண்டிகள் கண்ணில் பட்டது.

திருவான்மியூர் பக்கம் சாதாரண ஷேர் ஆட்டோகாரர் கூட இந்தியில் பேசி கஸ்டமர் பிடிக்கிறார்.

ஆனால் ஒரிஜனல் சென்னைவாசிகளுக்கோ இதனால் பல பிரச்சனைகள்..இந்திகாரர்கள் பேரம் பேசாமல் வீடு வாடகைக்கு பிடிக்கிறார்கள்.. இதனால் விலை வாசி ஏறி போச்சு என்ற கூப்பாடு வேறு...

சில அபார்மெண்ட்களில் சிண்டிகேட் வைத்து வீடு வாடகையை control செய்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். புரோக்கர் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.. வீட்டு வாட்ச் மேன் கள் முதல் தெரு குட்டி தாதா வரை எல்லாரும் புரோக்கர் ஆகி விட்டார்கள். சென்னையில் இனி தனியாளக வீடு தேடி பிடிப்பது முடியாத காரியம் ..

-*-

சென்னையில் எதற்க்கும் ஒரு விலை இருக்கிறது போலும். ரொம்ப சாதரணமாக ‘ யாராக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற டயலாக் காதில் விழுந்தது. பேச்சு அதுவும் அதிகாரமாக அதட்டி பேச தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் போல. சாதாரண சிம் காட்டு வாங்க கூட சிபாரிசு கூட்டி வருகிறார்கள். சாலையில் சின்ன சின்ன போக்குவரத்து தவறுகளுக்கு கூட குடும்பத்தை இழுக்கிறார்கள்.

சாலையில் சிக்னலில் நிற்க்கும் போது கூட கூச்சமே இல்லாமல் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை போட அனைவரும் தயார் என்ற மன நிலையில் இருப்பதை போல பிரமை..

அடையாரில் ஒரு சிக்னலில் ஹெல்மெட் போடாத யாரோ ஒருவரை போலிஸ்காரர் ஓரம் கட்டிய போது உடனே மொபைலில் யாரையோ துணைக்கு அழைத்து மொபைலை போலிஸ்காரரிடம் கொடுத்து பேச சொன்னார். போலிஸ்காரரும் சளைக்காமல் மொபைலை வாங்கி ஸ்விச் ஆப் செய்து பைக் சாவியை எடுத்து வைத்து கொண்டார்.

ம் இந்த நகரத்தில் அவருக்கும் அவர் வேலையை பார்க்க தனி திறமை தெரிந்து இருக்கிறது.

என்னால் ஐந்து நிமிடத்து மேல் சென்னை நகர சாலைகளில் நண்பனின் காரை ஓட்ட முடியவில்லை. ஆனால் நான் பார்த்த பெரும்பாலன சென்னை கார்கள் எந்த வித வெளி காயமும் இல்லாமல் இருக்கிறது.

பெங்களூரில் சர்வசாதரணமாக 200 ரூபாய் ஆகும் lunch buffet சென்னையில் சரவணபவனில் 120 ரூபாய்க்கு கிடைக்கிறது. சூப்பர் இட்லி கடைகள் மலிவான விலைக்கு ருசியான சாப்பட்டை தருகிறார்கள்....என்னதான் ஏஸி வைத்து இருந்தாலும் மின்சார செலவு மாதம் 200யை தாண்டவில்லையாம்.. தண்ணீர் பிரச்சனையும் முன்பு போல இல்லை...மின்சார ரெயில் நேர சிக்கன பயணம் வால்மீகி நகர் பீச்... என்ன சில நொட்டைகள் இருந்தாலும் சென்னை போல வருமான்னு நண்பன் சொன்ன போது சரிதான் என தலையாட்டினாலும் , சென்னைக்கு நானே வர நினைத்தாலும் அங்கு இனி இருக்க இடம் இருக்காது என்று தான் தோன்றியது.

Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.


இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??


ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..

அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..


சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,

போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..


4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??

எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??


நம்மவர் கெட்டப்பில் கமல் ...

பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.

இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..

எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

மோகன்லால்..

விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.

மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

இசை

படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..

பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..

விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..

உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.

Saturday, September 5, 2009