Tuesday, February 21, 2012

எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?


எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?

சிக்கல்
'மின்சாரம் நாட்டின் ஆதாரம்!’ - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிப்ரவரி மாத காலண்டரில் இருக்கும் வாசகம். ஆனால், இந்த வாக்கியத்தை தமிழக அரசு கொஞ்சம்கூட உணர்ந்த மாதிரி  தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் துறை 'டாஸ்மாக்’. மிக மோசமாகச் செயல்படும் துறை 'மின்சார வாரியம்’. இந்த இரண்டு துறைகளினால் எதிர்கால சந்ததி கடும் சவால்களையும், பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

டந்த இரண்டு வருடங்களாகவே இருந்து வந்த மின் தட்டுப்பாடு, சமீப காலமாக வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு மணி நேரமாக இருந்து வந்த மின்வெட்டு படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 8 மணி நேரமாக ஆகியிருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படுவது. அதிகாரப் பூர்வமாக இல்லாமல் என்று பார்த்தால், கிராமப் பகுதியில் பத்து மணி நேரத்திற்குகூட மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.
இந்த மின்வெட்டால் பொதுமக்கள், நிறுவனங்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிப்படைந்து மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மின்வெட்டால் லாபம் அடைந்தவர்கள், மெழுகுவத்தி, இன்வெர்ட்டர் வியாபாரிகள்தான்!

ஏன் இந்த மின்வெட்டு?
தமிழகத்தின் மின்தேவை சுமார் 11,500 மெகாவாட். குறைந்தபட்சம் இந்த அளவு மின்சாரம் இருந்தால் மட்டுமே தமிழகத்தின் மின் தேவை பூர்த்தியாகும். ஆனால், நமக்கு 3,500 யூனிட் பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டு  மொத்த உற்பத்தி திறன் 10,237 மெகாவாட். (மே 31 2011 நிலவரப்படி). ஒரு வேளை மொத்த உற்பத்தியும் நடந்தால் கூட நம் இலக்கை நாம் அடைய முடியாது.  மின் உற்பத்தியைப் பெருக்குவதில் நாம் கடந்த இருபதாண்டுகளில் எந்தவொரு பெரிய முயற்சியும் செய்யவில்லை என்பதே இந்த பற்றாக்குறைக்கு அடிப்படை காரணம்.
அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின் நிலையங்கள்தான் தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கு மிக முக்கியமான ஆதாரம். தமிழகத்தில் நான்கு அனல் மின் நிலையங்களில் உள்ள 17 யூனிட்கள் மூலம் ஆண்டுக்கு 2,970 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த 17 யூனிட்களும் ஆண்டு முழுக்க இயங்கிக் கொண்டே இருக்காது. இதில் 17 யூனிட்டில் ஏதாவது ஒன்று (சில சமயம் இரண்டு யூனிட்கள்கூட) பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும். ஒரு யூனிட்டை முழுக்க பராமரிப்பு பணி செய்து முடிக்க 25 முதல் 40 நாட்கள் வரை தேவைப்படும். தற்போது கூட வட சென்னை அனல்மின் நிலையத்தின் ஒரு யூனிட் பராமரிப்பில் இருக்கிறது.
இது ஒருபக்கமென்றால், அந்த யூனிட்களே பழுதாகி உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும். கடந்த வாரத்தில்கூட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட் பழுதாகி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிபார்க்க குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகும்.
அனல் மின் நிலையத்திற்கு அடுத்து நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைப்பது நீர் மின் நிலையங்கள் மூலம். இதன் மூலம் 2,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், குறைந்து வரும் மழை அளவால் நீர் மின்சாரத்தை நம்மால் பெரிய அளவில் நம்ப முடியாது. எனவே, 2,190 மெகா வாட் என்ற உற்பத்தியை நாம் ஒருபோதும் அடையவே முடியாது.
பெருகும் தேவை!
உற்பத்தியை உயர்த்த முடியாதது ஒரு காரணம் என்றால், தேவையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2001-ல் தமிழகத்தின் மின் தேவை 5,580 மெகாவாட் மட்டுமே. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆனால், எந்த புதிய திட்டங்களுமே இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் மென்பொருள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததை தமிழக அரசு கவனிக்க தவறிவிட்டது.
மேலும், நடுத்தர மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், மின்சார அடுப்பு போன்றவற்றால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. சமீபத்திய கேஸ் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு, எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது கடுமையாக அதிகரித்திருக்கிறது.

உற்பத்திக்கு வழியில்லை!
1930-ம் ஆண்டுகளிலே 69 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின் நிலையத்தை பைகாராவில் அமைத்தது தமிழகம். 1930களில் இருந்த தொலைநோக்கு திட்டம் 1990-களில் நமக்கு இல்லை.
1994-ம் ஆண்டு வட சென்னை அனல் மின்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகான 18 வருடங்களில் எந்த பெரிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. விரிவாக்கப் பணிகள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வந்தது.
1987-ம் ஆண்டு காடம் பாறையில் 400 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கப் பட்டது. அதன்பிறகு இவ்வளவு பெரிய நீர் மின் நிலையத்தைத் தமிழகம் அமைக்கவில்லை. 2, 3 மெகாவாட் திறன் கொண்ட யூனிட்களே  அமைக்கப்பட்டன. சுருக்கமாக, கட்சி, ஆட்சி வித்தியாசம் இல்லாமல் கடந்த 20 வருடங்களில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த உருப்படியான திட்டமும் வரவில்லை. ஆனால், குஜராத்தில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் கிடைப்பதால், உற்பத்தியை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஏன் இல்லை புதிய திட்டம்?
இதற்கு இரண்டு காரணங் களைச் சொல்கிறார்கள் மின் வாரிய அதிகாரிகள். முதலாவது, மின் பற்றாக்குறை இருக்கும்போது, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம், நிலக்கரி முதலிய வற்றை வாங்கலாம். அப்படி வாங்கும் போது நிறைய கமிஷன் பெறலாம் என்பது அரசியல்வாதிகள் எண்ணம். இரண்டாவது, புதிய மின் நிலையங்களை அமைக்கும் அளவுக்கு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை. தற்போதைய நிலையில் சுமார் 45,000 கோடி ரூபாய்க்கு கடனில் தவிக்கிறது மின் வாரியம். இந்த கடன் வரும் வருடங்களில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கழுத்தை நெரிக்கும் இந்த கடனுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை.  முதலாவது, கடந்த பத்து வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என்று பயந்தே இதில் கை வைக்காமலே விட்டுவிட்டன தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்கள்.
இரண்டாவது, மின் உற்பத்திக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு டன் நிலக்கரியின் விலை 2,160 ரூபாய், இப்போது 5,880 ரூபாய். இது மட்டுமல்லாமல், ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட அத்தனை உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரிக்கும் நிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்தத் தேவையான பணத்திற்கு மின் வாரியம் எங்கே போகும்?

என்னதான் தீர்வு?
உடனடி மற்றும் நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டிய விஷயங்கள் என நிபுணர்கள் சொன்னதை இங்கே பட்டியல் போடுகிறோம். முதலில் உடனடி யாகச் செய்ய வேண்டியது.
சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த திட்டங்கள் விரைவில் செயல்படத் தொடங்க போகிறது. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இவற்றிலிருந்து முழுமையான உற்பத்தி கிடைத்தால் மட்டுமே தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை தீரும்.
ஆனால், இந்த மின்சாரத்தைக் கொண்டு சில மாதங்களை மட்டுமே ஓட்ட முடியும். நமது மின்சாரத் தேவை சராசரியாக ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, மீண்டும் ஒரு பெரிய பற்றாக்குறை வர வாய்ப்புண்டு.  அதை சமாளிக்க இப்போதே அதற்கான வேலைகளில் இறங்குவது நல்லது. 
18,000 கோடி ரூபாய் செலவில் 4,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அல்ட்ரா மெகா பவர் பிளான்டை சென்னையை அடுத்த செய்யூரில் அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பு 2008-ம் ஆண்டு வந்தபோதும், இன்னும் பெரிய அளவில் வேலைகள் நடக்கவில்லை.
அணு மின் உற்பத்தி அதிக செலவில்லாதவை என்றாலும், அதனால் தங்களுக்குப் பாதிப்பு வருமே என்று நினைத்தே மக்கள் அதனை எதிர்க்கின்றனர். ஆனால், பாதிப்பு வராதபடிக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் எடுத்துச் சொல்லும் பட்சத்தில் அதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். இதனால் அணு மின் உற்பத்தி செய்ய வழி பிறக்கும்.
குந்தாவில் 600 மெகாவாட் (4ஜ்125) உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தை அமைக்க முடியும். ஆனால், இந்த திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.  இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் போது கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
இதேபோல ஒகேனக்கலிலும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையத்தை அமைக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கையை இதுவரை அரசு எடுக்கவில்லை.
சூரிய மின்சக்தி இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. (ஒரு யூனிட் தயாரிக்க 18 ரூபாய் வரை செலவாகிறது. அனல் மின் நிலையம் மூலம் என்றால் 4 ரூபாய்தான்!) ஆனால், குறைந்த செலவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து முயற்சிக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தர வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். எதிர்கால வளர்ச்சி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தித்து, செயல்படுகிறவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற வேண்டும்.
'மின்சாரம்தான் நாட்டின் ஆதாரம்’ என்பதை இனியாவது அரசாங்கம் உணர்ந்து,  அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பதே இன்றைக்கு புழுங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனின் கோரிக்கை.


this article is taken from vikatan.com, it not written from me credit goes to the vikatan.com.
ref: http://www.vikatan.com/article.php?aid=16434&sid=448&mid=6