வித்யா அக்கா மிக அழகாக தன் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளை சொல்லி இருக்கிறார்கள். என்னையும் எழுத சொல்லி இருக்காங்க. கிரிக்கேட்டை சொல்ல கூடாது, அதுக்கு தடா.... பேட்டிங்க மட்டும் செய்து விட்டு பீல்டிங் செய்யும் நேரங்களில் அம்மா தேடுவாங்கன்னு எஸ்கேப் ஆனது தான் நிறைய. சரி அதான் கிரிக்கேட்டுக்கு தடா ..
நான் சிறுவயதில் வசித்த ஊர் கிராமமும் அல்லாது நகரமும் இல்லாத ஒரு இரண்டும் கெட்ட ஊர். பெயர் மன்னார்குடி. தஞ்சை மாவட்டதுகே இருக்கும் அனைத்து தனி சிறப்புகளையும் கொண்டது..
எங்கள் ஊரில் விளையாட்டுகள் மாறி கொண்டே இருக்கும்.. பம்பரம், பலிங்கி ( கோலி), கிட்டி புல்லு, சொக்கை பாணை கூடவே ஒளிஞ்சு புடிச்சு ( ஐஸ் பாய்ஸ்)..
ஐஸ் பாய்ஸ் விளையாட்டு ஏப்ரல் மே மாதத்தில் தான் விளையாடுவோம். நிறைய புது நண்பர்கள் அந்த சமயத்தில் கிடைப்பார்கள். விடுமுறைக்கு சென்னை மும்பை இருந்து வரும் பல தற்காலிக நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ளும் ஆங்கிலம் எங்களை எல்லாம் வியப்பூட்டும். கூடவே பொறாமையாக இருக்கும். ஐஸ் பாய்ஸ் விளையாட்டில் அவர்களை பழிக்கு பழி வாங்கி விடுவோம்..
ஐஸ் பாய்ஸ் விளையாடும் போது எல்லைகள் உண்டு. இந்த எல்லை வரை தான் ஒளிந்து கொள்ள வேண்டும்.. வழக்கமாக நாங்கள் ஒளியும் இடங்கள் வீடுகளின் கதவின் மறைவில். முதலில் பிடிபட்டால் நாம அடுத்த ஆட்டத்தில் அனைவரையும் தேடி அலைய வேண்டும்.
புதுசா எங்க ஆட்டத்தில் யாராவது வந்தால் அவர்களை நொந்த போக வைத்து விடுவோம். வைக்கோல் போரில் ஒளிந்து கொண்டால் கடைசி வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தேடி கொண்டே இருக்க வேண்டியது..
ஜீன் மாதம் வந்தால் அந்த தற்காலிக நண்பகளும் காணாமல் போய் விடுவார்கள், பிறகு ...
இருக்கவே இருக்கு பலிங்கி அடிப்பது..
பலிங்கி விளையாடுவது மிகவும் சிரமான ஒன்று. எல்லாம் குட்டீஸ் பலிங்களையும் சேர்த்து உருட்ட வேண்டும்.. பின் குறி பார்த்து ஏதாச்சும் பலிங்கையை அடித்து விட்டால் நமது பலிங்கு எதிரி வசம்.
அழகாக தடிமான சோட்டா புட்டி உடை அனிந்த கோலி...அதை குறி பார்த்து அடிக்கும் போது நங் என்ற சத்தம் கேட்ட்க்கும். என்னதான் வேகமாக அடித்தாலும் உடையாது. கைகளின் நடு விரலை சற்று சொடுக்கி குறி பார்த்து அடிப்பது மிக பெரிய கலை. ஒரு பலிங்கி 10 காசு என்று வித்தது. கோலி சோடாவின் தொண்டையில் மிதக்கும் அந்த ஜந்துவுக்கு எத்தனை மரியாதை..
ஒரு நாள் என் பலிங்கி எல்லாம் இழந்து வீட்டிற்க்கு சென்று என்ன காரணம் என்று சொல்ல முடியாமல் அழுதது இன்று வரை மறக்க முடியவில்லை..
கிட்டிபுல்லு.. கிரிக்கேட் விளையாட்டின் முன்னோடி??
தேர்ந்து எடுத்த வேப்ப மர கிளையை ஒடித்து கிட்டியாக கிட்டி புல்லை செயய அப்போது எங்களிடம் தனி நிபுணர் குழுவே இருந்தது..
கிட்டி புல் தெரிவுல் விளையாடும் போது வேகமாக ஒரு முறை அடித்து ரோட்டில் சென்ற அப்பாவியின் தலையை பதம் பார்த்தது. அதன் முதல் இது வன்முறை விளையாட்டு என்று தடை செய்யபட்டது
ஆனால் அதை விட வன்முறை விளையாட்டை நாங்கள் தீபாவளி முதல் கார்த்திகை வரை விளையாடுவோம்..
சொக்கபாணம் என்று ஊரில் அதிகமாகி போன குப்பைகளை தென்னை மட்டை துனை கொண்டு எரிப்பார்கள்... தீபாவளிக்கு வாங்கி மீதமான வெடிகளை அப்படியே சைலண்டாக அந்த சொக்கபாணையில் போட்டு விடுவோம்.. சில வெடிகள் வெடிக்கும்.. புஸ்ஸாக சில வெடிகள் பறக்கும்..
யார் போட்ட வெடி வெடித்தது என்று பெரிய பட்டிமறனமே நடக்கும்.... கடைசியில் கார்த்திகை நாள் வரும் போது எங்களின் சொந்த த்யாரிப்பு வெடிகளையும் சேர்த்து விடுவோம்.
நாங்கள் அன்று விளையாடிய விளையாட்டுகள் இன்று வரை மறக்க முடியவில்லை...
இந்த விளையாட்டை தொடர நான் அழைப்பது
வால் பையன்
டோண்டு ராகவன்
1 comment:
எல்லாத்தையும் கலந்துகட்டி ஆடியிருக்கீங்க. நன்றாக இருந்தது. ஆனா என்னைப் போய் அக்கான்னு கூப்பிட்டுடீங்களே. இருங்க என்ன கொடுமை சார் இதுன்னு அடுத்த பதிவுல கண்டனத்தை பதிவு செஞ்சிடறேன்.
Post a Comment