Monday, June 22, 2009

வெட்டி வேலை


காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..



சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்




இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
-*-

விஜய் டிவியில் விருது கொடுக்கும் நிகழ்ச்சி நல்ல விஷயம் தானே , கமல் சாருக்கு ஏகப்பட்ட விருதுகள் சும்மா அள்ளி கொடுத்தாங்க. எனக்கே டவுட்டு பார்பது கலைஞர் டிவியா இல்லை விஜய் டிவியா கனவா நிஜமா..!!??

எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....


-*-
சென்ற வாரம் திருச்சிக்கு ஒரு நாள் அவசர பயணம்.. திரும்பி வர KPN travelsல் திருச்சி -> பெங்களூர் மதிய நேர வோல்வோ பஸ்ஸில் புக செய்து திரும்பினேன்..

எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .

.
பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..

மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..

சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..

வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..

அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது..
நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..

சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..

மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..


விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
-*-


குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger
http://www.liger.org/

நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்

Sunday, June 21, 2009

சமீபத்தில் பார்த்த படங்கள்


எனக்கு தெரிந்து பல பேருக்கு கன்னட சினிமா என்றாலே ராஜ்குமார் + sons ஞாபகம் தான் வரும்.

தமிழ் சினிமாவிற்க்கு கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் ( புலம் பெயர்ந்த் இலங்கை தமிழர்கள்) கன்னட சினிமாவிற்க்கு கிடைப்பதில்லை. அதனால் தானோ என்னவோ கன்னட சினிமாவில் வரும் பல நல்ல படங்கள் கர்நாடாவை விட்டு வெளியே தெரிவதில்லை..

கன்னட சினிமாவில் மேடை நாடகங்கள் இலக்கியம் நல்ல சினிமா என்று தனியே ஒரு குழு இயங்கி கொண்டு இருக்கிறது. மசாலா படங்களுக்கு நடுவே பல குறிஞ்சி மலர்கள் அடிக்கடி பூக்கும்.

மறைந்த சங்கர் இவர் மட்டும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால் தென் இந்திய சினிமாவில் கன்னடாவின் கொடி இன்னும் உயரே பறந்து இருக்கும்..

கிரீஷ் கர்னாட், அதுல் குல்கர்னி , சரத், ஆஷிஷ் வித்யார்த்தி என மசாலா படங்களில் வில்லனாக மிரட்டுபவர்கள் பல மான மேடை நாடக பிண்ண்னி கொண்டவர்கள். இன்னமும் தங்களின் மனதிருப்திக்காக நாடங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் 2007ல் வெளியான படம் ..அவ்வப்போது பெங்களூரில் நடந்த பழையை சம்பவங்களை அழகான திரைகதையோடு படமாகவும் எடுப்பார்கள்.

ஆ தினகளு ..( அந்த நாட்கள் )

இரண்டு தாதாக்களுக்கு இடையே 1986ல் சிக்கி தவித்த பெங்களூரு + அந்த தாதாக்களின் உலகம் + அந்த பிரச்சனையில் மாட்டி தவிவிக்கும் ஒரு காதல் ஜோடி ...இவர்களின் பிரச்சனையை பேசும் படம்.. இது 1986ல் பெங்களூரில் நடந்த கதை..படத்தின் திரைகதையை எழுதியது அக்னி ஸ்ரீதர். இவரின் பாத்திரமும் படத்தில் அங்கம்..

கோத்வால் ராமசந்திரா Vs ஜெயராஜ் ..ஒருவரை ஒருவர் அழிக்க துடிக்கும் தாதாக்கள்....
86 மார்ச் மாதம் கோத்வால் கொல்லபடுகிறார்..

கொலையாளிகள் ஒருவர் சேத்தன். வசதிக்கு எந்த வித குறைவும் இல்லாமல் சமூகத்தை பற்றி எதையும் கவலைபடாத சேத்தன் ஏன் எப்படி எதற்க்காக underworld ஆட்களிடம் போய் சேருகிறார் என்பதை அழகாக சொல்கிறார்கள்.

வன்முறையை பேசும் படம் தான் ஆனால் படத்தில் வன்முறை வாசனையே சுத்தமாக இல்லை.கத்தியில் நடக்கும் வித்தை அநாயசமாக செய்கிறார்கள்.

தாதக்களின் வாழ்க்கை யாரையும் நம்ப முடியாத அவர்களின் மன நிலை அவர்களின் குடும்பம் நட்பு என பல பக்கங்களை புரட்டுகிறார்கள். ஒரு காலத்தில் pensioners paradise ஆக இருந்த பெங்களூரின் வனப்பை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

இசை இளையராஜா -- சான்ஸே இல்லை பிண்ணணி இசை படத்துக்கு மிக பெரிய பலம்..பிண்ணனி இசை என்றால் என்ன என்பதை இந்த படத்தை பார்த்து தான் கத்து கொள்ள வேண்டும்.. அப்புறம் இரண்டு குட்டி குட்டி பாடல்கள்.. இளையராஜாவின் 80 இசை மீண்டும் ஒலிக்கிறது..

http://www.youtube.com/watch?v=nnLvKpYIyPo



இயக்கம் - சைதன்யா , கிரீஷ் கர்னாட்..

இந்த படமும் சுப்ரமணியபுரமும் கதைகளும் 80களில் நடந்த வன்முறைகளை தான் பேசுகிறது. சுப்ரமணியபுரம் படத்தை எப்போது பார்த்தாலும் இரைச்சலான பிண்ணணி இசையும் வன்முறையும் படம் முடிந்த பின் மனதை ஆக்கிரமிக்கும் வன்முறை சார்ந்த பயமும் தான் தெரிகிறது. ஆனால் இந்த படம் அதற்க்கு நேர்மாறாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.

இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பாருங்க..

பசங்க

எனக்கு விக்கிரமன் படங்கள் ரொம்ப பிடிக்கும்..அவரு படத்தில் கெட்டவங்களே யாரும் இருக்க மாட்டாங்க.. எல்லாருமே லா லா லா இசை ஒலிக்க வரும் நல்லவங்க தான். அவர் படத்தில் தெரியும் ஒரு positive energy , மிதமான நகைச்சுவை ஞாயிறுகளில் மதிய நேரங்களில் எந்த வேலையும் இருந்தால் நிம்மதியாக பார்க்கலாம்.


என்னவோ தெரியலை இந்த படத்தின் இறுதியில் இயக்குநர் பெயர் திரையில் தெரிந்த போது என்னையும் அறியாமல் கை தட்டினேன். பல காரணங்கள் இருக்கல்லாம்..நானும் சிறுவனாக இருந்த போது இதே போல் செய்த சேட்டைகளை மீண்டும் பார்த்த காரணமோ இல்லை படம் முழுதும் அட்வைஸ் என தெரியாமல் அழகாக positive செய்திகளை சொன்னதோ..

எதுவாக இருந்தாலும் தமிழில் வந்த படங்களில் இந்த படம் மிக மிக முக்கியமான படம்.

சிறுவர்களின் உலகம் இது வரை தமிழ் படங்களில் ரொம்ப பேசபடாத ஏரியா..மிக மிக அழகாக படம் எடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி இயக்குநர் பாண்டிராஜுக்கு பின் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும்.

படத்தில் என்னை உறுத்தியது ஒரே விஷயம் தான்..படத்தில் ஒரு காட்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது.. தியேட்டரில் அங்கங்கே சில பேர் எழுந்து நிற்க்கிறார்கள்.. கையில் வைத்து இருக்கும் பாப் கார்ன் கீழே விழுந்து விடுமோ என்ற பயத்த்தில் சில பேரும் சொரணையே இல்லாமல் சிலரும் பேர் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்..யாரையும் குற்றம் சொல்ல முடியாது. தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலுமே கேட்டு பழகி போன நமக்கு இப்படி தடாலடியாக வரும் தெரிந்து இருக்க வாய்பில்லை.. தேசிய கீதத்தை இப்படி படத்தில் காட்சியாக வைப்பதை தவிர்க்கலாமே..

Sunday, June 14, 2009

குளிர் 100 - விமர்சனம்


சும்மா ஜாலியா 2 மணி நேரம் டைம் பாஸ் ஆகணுமா, இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்

புது விதமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு வேகமான திரைகதை வைச்சு நல்லாவே எடுத்து இருக்காங்க..

இந்த படத்தின் பாடல்கள் வந்து ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு..

ஹிப் ஹிப் ஹுரே ,பெங்களூர் பார்ட்டி வி ஜேகளின் மனதை கவர்ந்த பாடல் .. பல இடங்களில் இந்த பாடல் கேட்டு இருக்கிறேன்...ம் சும்மா சொல்ல கூடாது ...அருமையான பாடல்.. பாடலுக்கான நடனமும் அருமை..


மனசெல்லாம் பாடலும் மனதை பிழியும் மெலோடி,, சிம்பு பாடுவது தான் கொஞ்சம் உறுத்தல்..

குளிர் பிரதேச ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடக்கும் கதை.. ராக்கிங்..நட்பு கொஞ்சம் செண்டிமெண்ட், லூசு ஹீரோயின் , ரிவென் ஜ் ...அதுக்குல்ல 2 மணி நேரம் ஆச்சு.. க்ளைமேக்ஸ் கொஞ்சம் சொதப்பல்... அதை விட்டு தொலைங்க.. படம் நல்ல interesting ஆக இருந்துச்சு..

படத்தில் 90% புது முகங்களின் ஆதிக்கம் தான்..
ஹிரோ சஞ்சீவ் ஸ்மார்டாக இருக்கிறார்.. அப்புறம் சயித் நிதீஷ் கார்திக் ரியா ம் ஓகே ஓகே..

படத்தை நிஜமாகவே தாங்குவது பாபோ சசி.. இசையும் இவரே.. கோடம்பாக்கத்தில் இனி இவரை அடிக்கடி பார்க்கலாம் அல்லது கேட்க்கலாம்.

படம் ஊட்டி ஏற்காடு அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் சென்னையில் எடுத்து இருக்காங்க..
படம் முழுக்க பசுமையின் ஆதிக்கம்.. கொஞ்சம் க்ராபிக்ஸ் நகாசு வேலையும் செஞ்சு இருக்காங்க.

எழுதி இயக்கியது ”அழகிய அசுரா” பாடிய ‘அனிதாஉதீப்’ ... சோதனை முயற்ச்சி போல..

கேமரா ஒர்க் அருமை... குளிர் மழை காலங்களுக்கே நம்மை அழைத்து செல்கிறார்..என்ன தியேட்டரிலும் எனக்கும் அதே குளிர் கால பீலிங்க்சு...ஒரே குளிர் தாங்க முடியல.. மொத்தமே 10 பேர் தான் தியேட்டரில்....

இதுல இண்டர்வல் கார்டு போட்ட போது இரண்டு பேரு சூப்பர் சம்ம சீன்னு கைதட்டி விட்டு ஓடி போய்டாங்க..

பக்கத்து ஸ்கீரினில் மாசிலாமணி ஹவுஸ் புல். :))) ...

Friday, June 12, 2009

உன்னை போல் ஒருவன்


என்னை போல ஒருவன் .

.இந்தியில் சென்ற ஆண்டு வந்த படங்களில் குறிப்பிடதக்க ஒன்று Wednesday..

அதை நமது ஆஸ்கர் நாயகன் கமலஹாசன் தமிழில் ரீ மேக் செய்கிறார். .

பட கதை விவாதம் அதான் discussion எப்படி தான் செய்வாரோ??



சுட்ட கதையாக இருந்தாலும் உல்டா செய்யும் போது உலக நாயகனின் special touch இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காதே..

என்னால் முடிந்தது கொஞ்சம் இலவச ஐடியாக்கள்

1. என்ன தான் ஆஸ்கர் ரேஞ்சுக்கு படம் எடுத்தாலும் பக்தி துதி பாடல்கள் கண்டிப்பா வேணும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா ஏற்கனவே போட்டாச்சு..இந்த தபா கோபாலபுரம் கோபாலான்னு புதுசா ஒரு பாட்டு போடுங்க. ’கோபாலபுரம் கோபாலா கலகசனை கொஞ்சம் பாருப்பா’ன்னு ஆர்ம்பிச்சா சூப்பரா இருக்கும்..

அப்படியே ஒரிஜினல் கோபாலபுரம் பெரியவர் ஆளுங்க கடுப்பாகி கோர்ட்ல கேஸ் போடுவாங்க..படத்துக்கு சரியான விளம்பரம்...அப்படியும் கேஸ் போடலாயா விடுங்க சாப்ட்வேர் ஆளுங்களை
அமெரிக்க கை கூலின்னு திட்டறமாதிரி சீன் வைங்க . ..கண்டிப்பாக கேஸ் போடுவாங்க..

2. படம் கதை என்ன, ரொம்ப சிம்பிள் ஒரு வயசான ஆளு குண்டு வைக்கிறாரு..போலிஸ் கன்பியூஸ் ஆகுது. இதை மாத்தி யோசி பார்முலாபடி அதான் ஹேராம் தசாவதாரம் பார்முலா படி நீங்களே குண்டு வைக்கிறீங்க..அதை நீங்களே கண்டுபுடிறீங்க.. இரண்டு வேடம் ஆச்சு.. இரண்டு வேடத்துக்கும் ஒரே மாஸ்க்....
மூணாவது மாஸ்க் கிருஸ்து பிறப்புக்கு முன் இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம்ன்னு ஏதாச்சும் எடுத்து உடலாம்.. நடுவுல மானே தேனே பொன்மானே அபிராமி உதயம் தியேட்டர்ன்னு டயலாக்..தியேட்டர்ல எவனுக்கும் கதை புரிய கூடாது..புரியற மாதிரி இருந்தா உங்க இமேஜ் என்னாகும்..


உலக நாயகன் படம் நிஜமாகவே உலக தரம்ன்னு அதான் நமக்கு மட்டும்தான் புரியலன்னு அவனவன் தியேட்டர் வாசலில் தலைவா கலக்கீட்ட உலக தரம்ன்னு பில்டப் கொடுத்து கொடுத்து படத்தை ஓட வைச்சுருவாங்க.

3. ஆஸ்கர் உலக தரம் இல்லை அமெரிக்கா தரம் மட்டுமேன்னு ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைச்ச வயித்தெரிச்சல்ல ஏதோ பேசிட்டிங்க.. நீங்களும் ஹே ராம் படம் ஆஸ்கர் விருதுக்காகதானே எடுத்தீங்கன்னு எவனாச்சும் வேலை இல்லாதவன் கேள்வி கேக்க போறான்..

கேட்டா பதில் சொல்லியே ஆகனும்...படத்துல பஞ்ச் டயலாக் வைக்கிறோம்.. நானே விருது எனக்கு எதுக்கு விருந்துன்னு ஸ்கீரின்ல நீங்க சொன்னா க்ளாப்ஸ் ல தியேட்டரே அதிரும்..சில பேரு அதை காமேடின்னு நினைச்சு சிரிப்பாங்க விட்டு தொலைங்க நீங்க பார்க்காத தோல்வியா??

இந்தி தசாவதாரம் 5 நாளில் தியேட்டரை விட்டு பறந்து ஓடிய போது அவங்களுக்கு ரசனை இல்லைன்னு நமக்கு நாமே திட்டத்தின் படி தயாரிப்பாளருக்கு நாமம் போடலையா ..லூஸ்ல விடுங்க ஜி..

4. வழக்கம் போல உங்க பட செண்டிமெண்ட் படி சம்பந்தம் இல்லாம நாத்திகம் பெரியாரு இப்படி எல்லாம் டயலாக் வைங்க...வழக்கம் போல படம் வெளியே வருவதற்க்கு முன்னரே ஆளு வைச்சு கோர்ட்ல கேசு போட்ட வைங்க..படம் சூப்பர் டூப்பர் ஹிட்

5. தசாவதாரம் Angels and Demonsல் சுட்ட கதையானாலும் சூப்பரா உட்டாலங்கடி பண்ணி எவனும் கண்டு புடிக்க முடியாதபடி செஞ்சீங்க..எப்படி முடியும்..எவனுக்கும் படத்துல ஒன்னும் புரியல..சரி முத தடவ தான் படம் புரியல..இரண்டாம் தடவை பார்த்தாலவது புரியும்ன்னு தியேட்டருக்கு வருவான்..ரீப்பீட் ஆடியன்ஸ் படம் சூப்பர் ஹிட்...

6. மோகன்லால் போன்ற ஆளுங்க நிஜமாகவே நல்லா நடிப்பாங்க..நடிக்கற மாதிரி ஓவர் ஆக்டிங் போடமாட்டங்க.. ரொம்ப ரொம்ப டேஞ்சரு.. ஹே ராம்ல ஷாருக்கான் மேட்டரை எப்படி டீல் செஞ்சீங்களே அதே போல மோகன்லாலை டீல் செய்யுங்க..

7. Wednesday படத்துல பாட்டே இல்லை.. உங்க படத்துல பாட்டு இல்லைன்னா குருதி புனலுக்கு ஆன கதி தான் இதுக்கும்..வைரமுத்து வாலி ரெண்டு பேரையும் கோபாலபுரம் அழைச்சுட்டு போங்க..அங்க அவங்க ரெண்டு பேரையும் கோபாலபுரம் பெரியவரை வாழ்த்தி கவிதை எழுது சொல்லுங்க.. உலகில் பிறந்த அத்தனை கவிஞர்களும் தோத்துடுவாங்க..

அப்படியே அந்த கவிதையை உல்டா பண்ணி அங்கங்க உலக நாயகனே காலத்தை வென்றவனே செவாய் கிரகத்தில் குரங்கு பிடித்தவனேன்னு வார்த்தைகளை மாத்தி போட்டு ஒரு குத்து பாட்டை போடுங்க.. கே எஸ் ரவிக்குமார் முதல் பல பேரு வலிப்பு டான்ஸ் ஆட ரெடியா இருக்காங்க..


8. மறக்காம உங்க ரெகுலர் மேட்டர்களான தாடி சந்தான பாரத்திக்குக்கு ஒரு ரேப் சீன், நீங்க ஏதாச்சும் ஏதாச்சும் தூணில் இடித்து விழுவற சீன், நீங்க அழுது கிட்டே சிரிக்கற சீன், இதை எல்லாம் வைச்சுடுங்க..என்ன சின்ன குழந்தைங்க அம்மா வீட்டுக்கு போலாம்மான்னு அழுவும்..
அவங்களை சரி பண்ண ஒரு மாஸ்க் கேரக்டர் வைச்சு காமேடின்னு நினைச்சு நீங்களே ஏதாச்சும் டயலாக் பேசுங்க.. காமேடின்னா மெட்ராஸ் பாசையில் பேசுவது தானே..


9.கடைசியா படம் பார்த்துட்டு வந்து எவனாவது கடுப்பாகி ப்ளாக்குல விமர்சனம் எழுதினா உங்க பார்முலா படி என்ன சொல்றீங்கன்னு புரியாம திட்டுங்க.. எல்லாரும் அப்பீட்டு ஆயிடுவாங்க.. நீங்க தான் உலக நாயகன் நீங்க தான் உலகத்தில் சிறந்த நடிகர் எவனாலும் அடிச்சுக்க முடியாது..

இன்னும் ஐடியா ஏதாச்சும் வேணும்ண்ணா உங்க ஹேராம் குணா ஆளவந்தான் போன்ற காவியங்களை நீங்களே பாருங்க...

Sunday, June 7, 2009

கண்டதும் கேட்டதும்

போனவாரம் landmarkல் புத்தம் புதுசா ஒரு புக் வாங்கினேன்.. 'weekend hangouts around Bangalore'.. வழக்கம் போல புக் வாங்கியதோடு நிறுத்தி இருக்கலாம்..விதி யாரை விட்டது..புத்தகத்தில் இருந்த படங்களை பார்த்து எடுறா வண்டியைன்னு மேல்கோட்டை பயணம் முடிவானது.

கூட புதுசா Alto வாங்கிய என் அப்பாவி நண்பன்.

.
மேல்கோட்டை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 'தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா'ன்னு சூப்பர் ஸ்டார் சல்யூட் அடிப்பாரே அந்த இடம் தான்.. ரொம்ப ரீஜண்டா ஆனந்த தாண்டவம் படத்தில் ' கனா காண்கிறேன் கண்ணா ' பாடலும் இங்கு தான் படமாக்கபட்டது.



ரொம்ப ரொம்ப அருமையான அழகான இடம்.காவிரி கரையில் அமைதியாக ரிலாக்ஸ் செய்ய ஏற்ற இடம்.
வைழ்ணவ ஆலயம்.. தல வரலாறு சோழ மன்னனோடு ஏற்பட்ட தகராற்றில் ராமானுஜர் 14 வருடங்கள் வனவாசம் இங்கே தான். அவரால் ஏற்படுத்தபட்ட பூஜை நியதிகள் இன்னமும் இந்த ஆலயத்தில் தொடர்கிறது.. குமுதம் பக்தி தொடர்சியாக படிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம்.



தமிழ் படங்களின் ஆஸ்தான பஞ்சாயத்து செய்யும் இடம்....இப்போ பருவ மழை காலம் ..இரண்டு தூண்களுக்கும் நடுவே ஒரு கயிற்று கட்டிலை கட்டி நிம்மதியாக தூங்கலாம்..

my dear tourism department..இந்த கோரிக்கையை கொஞசம் கவனிக்கவும்..

மேல்கோட்டை எங்கே இருக்கிறது..

மைசூர் தும்கூர் சாலையில்..மைசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் முதல் வழி இல்லையென்றால் பெங்களூர் மைசூர் சாலையில் வலது பக்கம் மாண்டியா வழியாகவும் கன்னடா மாத்தாட தெரிந்தால் சவுரியமாக போகலாம்..

வெறும் கோவில் மட்டும் தானா??

காவிரி ஆற்றில் மீன் பிடிக்க தெரிந்தால் அல்லது மீன் பிடிக்க தெரிந்த மாதிரியாவது சீன் போடலாம்.. பருவ மழை காலத்தில் பயணம் செய்தால் எங்கு காணினும் பச்சை நிறமே.

போகும் வழியில் கண்ணில் பட்ட காட்சிகள்...


***************************************************


forum mall ல் சுற்று சூழல் பாதுகாப்பு தினத்திற்க்காக பேப்பர் கோப்பைகளை வைத்தே ஒரு பெரிய்ய்ய அழகான பட்டாம் பூச்சி செய்து பார்வைக்கு வைத்து இருந்தார்கள்.. நம்ம பொது ஜனம் பக்கத்துல இருக்கும் மெக் டொனால்ஸில் ப்ளாஸ்டிக் பேப்பரில் பர்க்கர் take away வாங்கி இதை பார்த்து கொண்டே ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.